அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 வயதுடைய பெண் மற்றும் 27 வயதுடைய ஆண் ஆகிய இரு சந்தேக நபர்களும் நேற்றிரவு கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அநுராதபுரம் வைத்தியசாலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய காரணத்திற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் சந்தேக நபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் கைப்பேசி மற்ற நபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த சத்பவத்தை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
இருப்பினும், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் மாத்திரம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அநுராதபுர கிளையின் செயலாளர் வைத்தியர் சசிக விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.