NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதன் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பெருந்தோட்டங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க அவர்களுக்கு 10 பேர்ச் நிலத்தை சட்டரீதியான அனுமதியுடன் வழங்குவதே தீர்வாக அமையும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

மாத்தளைஇ எல்கடுவஇ ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், ‘மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு முதலில் நாம் கவலையை தெரிவித்துக்கொள்கிறோம்.

நடைபெறக்கூடாத சம்பவமொன்றே நடைபெற்றுள்ளது. தேவையற்றவிதத்தில் கட்டப்பட்டிருந்த இந்த வீட்டை அகற்றுவதற்கு தோட்ட உதவி முகாமையாளர் நேரடியாக தலையீடு செய்துள்ளார்.

தேவையற்ற விதத்தில் கட்டப்படும் வீடுகளை அகற்றுவதற்கு சட்ட ரீதியான முறையொன்று உள்ளது. அதனை உதவி முகாமையாளர் பின்பற்றாது இவ்வாறு செயல்பட்டுள்ளார்.

குறித்த உதவி முகாமையாளருக்கு கட்டாய விடுறையை அளித்து இடத்தையும் மாற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் பணித்துள்ளேன்.

அவருக்கு எதிராக உரிய விசாரணைகள் நடைபெற்றதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த உடனே அமைச்சர் ஜீவன் தொண்டமான்இ குறித்த இடத்திற்கு சென்று, அந்த மக்களுக்காக நின்றார். அதேபோன்று மனோகணேசன் மற்றும் இராதாகிருஷ்ணன் போன்றோரும் எனக்கு அழைப்பை மேற்கொண்டு இதுதொடர்பில் வலியுறுத்தினார்.

24 மணித்தியாலத்துக்குள் அமைச்சர் ஜீவன் அங்கு சென்றார். முகாமையாளர் உட்பட அனைவரும் அங்கு அனுப்பப்பட்டனர். தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும். இதனை சட்ட ரீதியாக உரிய வகையில் செய்ய வேண்டும். இதன்மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்’ என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், ‘இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களிலும் நடைபெற்றுள்ளன. உரிய வகையில் வழக்குகள் இடம்பெறாது. விசாரணைகள் இடம்பெறாது. இவை குறித்தும் விசாரணைகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என்றார்.

Share:

Related Articles