NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுமக்களின் முறைப்பாடுகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு..!

பொலிஸ் நிலையங்களில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சம்மன் கிடைக்காவிடின், அது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் சம்மன் கிடைக்கப்பெறாத பொதுமக்கள் www.telligp.police.lk என்ற இணைய பக்கத்தின் ஊடாக பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள பல்வேறு முறைப்பாடுகள் இதுவரையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாகவும், அவற்றை விசாரணை செய்து 2 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து அமுல்படுத்துமாறு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள பெருமளவான முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படாமலும் விசாரணைகள் நிறைவடையாமலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சிறு சம்பவங்களாக பதிவாகும் பல்வேறு முறைப்பாடுகள் மிகவும் பாரதூரமான குற்றமாக மாறி, பொலிஸாரின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொலிஸ் நிலையங்களில் பதிவாகும் பல்வேறு முறைப்பாடுகள் குறித்து முறைப்பாடு வழங்கப்பட்ட நாளிலேயே விசாரணைகளை நடத்தி, 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அமைப்பை கண்காணிக்கவும், உத்தரவுகளுக்கு மாறாக செயல்படும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Share:

Related Articles