NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் இளவரசி கேட் மிடில்டன்!

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவரது மருத்துவ குழு மறு மதிப்பீடு செய்து வருகிறது.

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு (வயது 42) கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், குடும்பத்தின் நலன் கருதி அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்து வருகிறார்.

இந்நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதால் கேத் மிடில்டன் இந்த ஆண்டு முழுவதும் பொதுவெளியில் தலைகாட்ட மாட்டார் என்று ஒரு வாரத்திற்கு முன்பு டெய்லி பீஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இப்போது நியூயோர்க்கை தளமாகக் கொண்ட யு.எஸ். வீக்லி இதழில் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைத்த தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கேத் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவரது மருத்துவ குழு மறு மதிப்பீடு செய்து வருகிறது. மருத்துவக் குழு அனுமதித்தால் அவர் அரச கடமைகளுக்கு திரும்புவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இங்கிலாந்து மன்னரும், கேத் மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles