NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போசாக்கின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள்!

மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுடன் மத்திய மாகாணத்தில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அணுகல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சுகாதார திணைக்களம் விடுத்துள்ள தகவல் கோரிக்கைக்கு வழங்கிய தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வழங்கிய தகவலின்படி,

மாகாணத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், 15,920 சிறுவர்கள் மிதமான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 27,812 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கண்டி மாவட்டத்தில் 970 சிறுவர்களும், மாத்தளை மாவட்டத்தில் 461 குழந்தைகளும், நுவரெலியா மாவட்டத்தில் 711 சிறுவர்களும் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 7626 சிறார்களும், மாத்தளை மாவட்டத்தில் 3716 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 4588 சிறுவர்களும் மிதமான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கண்டி மாவட்டத்தில் 11,044 சிறுவர்களும், மாத்தளை மாவட்டத்தில் 4051 சிறுவர்களும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 12,717 சிறுவர்களும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில், கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை கண்டி மாவட்டத்தில் உள்ள அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 76 ஆகும்.

மேலும், யட்டிநுவர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 68 பேரும், மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேரும், வில்கமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 61 பேரும் பதிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 89 பேரும், லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84 பேரும் அதிகளவான போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த புள்ளிவிபரங்களின்படி நுவரெலியா மாவட்டத்தில் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்தின்மை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles