NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் செயலால் தடம் புரளும் ரயில்கள் – ரயில்வே திணைக்களத்தின் கோரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருளுக்காக ரயில் தண்டவாளங்களில் உள்ள ஆணிகள் மற்றும் இரும்புகளை அகற்றுவதால் பெரும்பாலான ரயில்கள் தடம் புரள்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (27) மாலை 4 மணியளவில் கொஸ்கம நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் பேஸ்லைன் ரயில் நிலையத்துக்கும் கோட்டே வீதி ரயில் நிலையத்துக்கும் இடையிலான பகுதியில் தடம் புரண்டது.

என்ஜின் உட்பட 3 ரயில் பெட்டிகள் இவ்வாறு தடம் புரண்டமையால், களனிவெளி பாதையின் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருளுக்காக தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகள் மற்றும் இரும்புத் துண்டுகளை அகற்றுகின்றனர். இவ்வாறான சம்பவம்தான் பேஸ்லைன் – கோட்டே வீதி ரயில் நிலையத்தை அண்மித்த தண்டவாளத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த ரயில் தடம் புரண்டது.

போதைப்பொருள் பாவனையாளர்கள் தாம் செய்வது எவ்வளவு பெரிய பாரதூரமான செயல் என்பதை அறிவார்களா என்பது சந்தேகத்துக்குரியது. இவ்வாறு வெறுக்கத்தக்க செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களில் அல்லது ரயில் பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Related Articles