கொள்கலன் நெரிசலை நிறுத்த, அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த வாரம் கொள்கலன் பாராவூர்தி சாரதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல மாதங்களாக நீடிக்கும் கொள்கலன் பாராவூர்தி நெரிசல் குறித்து பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியிட்டிருந்தாலும், இதுவரை குறித்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொள்கலன் பாராவூர்தி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கூறுகையில், அனுமதிப் பணிகளின் போது ஏற்படும் சிக்கல்களால் இந்த நெரிசல் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கொள்கலன் நெரிசலை நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில், அடுத்த வாரம் முதல் கொள்கலன் பாராவூர்தி சாரதிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் எனவும் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.