(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளம் தம்பதியொருவர் நேற்று (01) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து இலங்கை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நோக்கிச் செல்லும் நுலு-279 என்ற நுவihயன யுசைடiநௌ விமானத்தில் ஏறுவதற்காக நேற்று பிற்பகல் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தம்பதிகள் மீதான சந்தேகத்தின் அடிப்படையில், குடிவரவு – குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு போன் செய்து, உடமைகளை சோதனை செய்த போது, தவறான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட 02 கடவுச்சீட்டுகள் மற்றும் இளைஞனுடைய போலி விசா ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த யுவதியின் விசா தொடர்பில் வினவிய போது அவர் மௌனம் காத்ததால் இலங்கை பெண் குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவரை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வரவழைத்து யுவதியை சோதனையிட்டுள்ளனர்.
அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலிய விசா கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு போலி கடவுச்சீட்டுகளின் உண்மையான உரிமையாளர்களான பிடகோட்டே பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் ஏற்கனவே தமது உண்மையான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களை பயன்படுத்தி விமானத்தில் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.