போலியான பயண ஆவணங்கள் மூலம் 17 வயது சிறுவன் ஒருவரை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் சிறுவனுடன் லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளார். எனினும் அவர்களின் பயண ஆவணங்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக எல்லைக் கண்காணிப்புப் பிரிவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் பயண ஆவணங்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குறித்த சிறுவன் தன்னுடன் வந்த பெண் தமது தாய் இல்லை என்றும், தனது தாய் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இரு பெண்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும், குழந்தையின் முன்னேற்றத்திற்காகவும் சிறுவனை லண்டன் அனுப்ப முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.
மனிதக் கடத்தலுக்குப் பொறுப்பான இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனின் விவரங்களின் அடிப்படையில் சிறுவன் மற்றும் பெண்ணின் பயண ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.