இந்தியா – கர்நாடக மாநிலம், கொப்பல் தாலுகாவில் உள்ள உலிகி கிராமத்தில் குழந்தையை 100 ரூபாவுக்கு விற்ற பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கிராமத்தில் யாசகம் பெற்று வாழ்ந்துவரும் 25 வயதுடைய பெண் ஒருவர், தனது குழந்தையை 100 ரூபாவுக்கு விற்றுள்ளார்.
அவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், வீதியில் சுற்றித்திரிந்த இவரிடம், அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண், குழந்தையை விலைக்கு வாங்கி உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் விலை கொடுத்து வாங்கப்பட்ட குழந்தையை மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதுடன், குறித்த விசாரணையில், யாசகம் பெற்றுவரும் பெண்ணுக்கு, மது பழக்கம் உள்ளமையால், மது குடிப்பதற்கு பணம் இல்லாததன் காரணமாக, 4 மாத பெண் குழந்தையை அந்த பெண், அதேப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.100க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
ஏற்கனவே அந்த பெண் இதேபோல் மற்றொரு குழந்தையையும் விற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதையடுத்து குழந்தையின் தாயை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.