NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னாரில் பாடல் போட்டி என்ற போர்வையில் பல இலட்சம் மோசடி!

இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரெஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று Facebook பக்கத்தின் ஊடாக பாடல் போட்டி தெரிவை நடாத்தி இன்றைய தினம் இறுதி போட்டி என்று அழைத்து பல இலட்சம் ரூபா வசூல் செய்து போட்டியாளர்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து மாத்திரம் இல்லாமல் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கண்டி, நுவரேலியா, கொழும்புஇ மாத்தளை என இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து குறித்த போட்டியில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கலைஞர்கள் சென்று தந்திருந்துள்ளனர்.

மூன்று மாதங்களாக குறித்த போட்டியை பதிவு செய்யப்படாத வானொலி ஒன்றின் பெயரின் ஊடாக விளம்பரப்படுத்தி தென் இந்தியாவில் இருந்து பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொள்வதாகவும் பல இலட்சம் பெறுமதியான பரிசில்கள் இருப்பதாக தெரிவித்து கலந்து கொள்பவர்களிடம் 1,750 ரூபாய் வீதம் வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பண வசூல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று (26) இறுதி போட்டியில் கலந்து கொண்டவர்களிடம் 1,750 ரூபாயும் மற்றும் பார்வையாளர்களிடம் 400 ரூபாயும் வசூல் செய்து மண்டபத்திற்குள் அனுமதி வழங்கியுள்ளனர்.

சுமார் 1000 மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி குறித்த நிகழ்சியை பார்வையிடுவதற்காக காத்திருந்துள்ளனர். 8 மணிக்கு ஆரம்பிப்பதாக அறிவித்த போட்டிகள் 11 மணியளவில் ஆரம்பித்தாகவும் இசைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டதாகவும் குறிப்பாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடனத்துடன் சம்மந்தப்பட்ட கலாசர உத்தியோகஸ்தர் ஒருவரும் யார் என்றே தெரியாத மூவரும் நடுவர்களாக கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பல முறை நிகழ்சியின் இடை நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில் குண்டர்கள் சிலர் போட்டியாளர்களை மிரட்டி அமர வைத்துள்ளனர். இந்த நிலையில் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்த போட்டியாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இன்றைய தினம் போட்டி ஒழுங்கான முறையில் இடம் பெறவில்லை என்பதுடன் வெற்றியாளர்களும் தெரிவு செய்யப்படவில்லை. குறித்த போட்டியின் உண்மை தன்மை அறியாது இலங்கையின் பல பாகங்களில் இருந்து பல நூறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு பணத்தினை இழந்துள்ளனர்.

குறிப்பாக முன்னதாகவே பல வெற்றிகளை பெற்ற திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியை இந்த போட்டியில் பாட வைப்பதற்காக ஒரு கிராமமே பஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஒரு இலட்சத்துக்கு மேல் செலவு செய்து இந்த நிகழ்சிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles