NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கணிய மண் ஆய்வு செய்வதற்கான மாதிரிகளை பெற்றுக் கொள்ள மக்கள் எதிர்ப்பு..!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  ஓலைத்தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகள் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனிய  மணல் அகழ்வுக்கு    கணிய மண்ணை ஆய்வு செய்வதற்கான மாதிரிகளை பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் மற்றும் பொது அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் புதன்கிழமை(6) மதியம் தொடுக்கப்பட்ட வழக்கு   பொலிஸாரினால் கை வாங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுமதியுடன்,மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்,உள்ளடங்களாக சுமார் 20 அரச திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  ஓலைத்தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் கணிய மண்ணை ஆய்வு செய்வதற்கான மாதிரிகளை பெற்றுக் கொள்ளும் வகையில்,இன்று புதன்கிழமை(6) காலை குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்தனர்.

இதன் போது அப் பகுதிக்கு வருகை தந்த மக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ,சிவில் அமைப்புகள் அவ்விடத்திற்கு வந்து கணிய மண்ணை ஆய்வு செய்வதற்கான மாதிரிகளை பெற்றுக்கொள்ள தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் போது பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.இதன் போது எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,மன்னார் பொலிஸார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,சட்டத்தரணி எஸ்.டினேசன்,பிரஜைகள் குழுவின் தலைவர் மார்க்கஸ் அடிகளார்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உள்ளடங்களாக சிலருக்கு எதிராக ‘B’ .அறிக்கையினை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106 ன் கீழ்  தாக்கல் செய்து குறித்த நபர்களுக்கு எதிராக தடை உத்தரவு  கோரி இருந்தனர்.

குறித்த 106 வது பிரிவின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடு படாமல் இருக்கவும்,குறித்த செயல்பாட்டிற்கு  தடை விதிக்க கூடாது என்பதன் அடிப்படையில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது.

குறித்த விண்ணப்பத்தின் போது திடீர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் விண்ணப்பம் நிறை வடைகின்ற சந்தர்ப்பத்தில் வெளியில் சென்று மீண்டும் மன்றினுள் வந்து குறித்த விண்ணப்பத்தை தாங்கள் மீண்டும் கை வாங்குவதாகவும் மன்றில் விண்ணப்பம் செய்த னர்.
அதன் அடிப்படையில் குறித்த வழக்கு கை வாங்கப் பட்டுள்ளது என சட்டத்தரணி எஸ்.டினேசன் மேலும் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனிய வள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கைக்காக இன்று புதன்கிழமை (06) மன்னார் மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் வாகனங்களில் குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த அக்கிராம மக்கள், பொது அமைப்புக்கள் உள்ளடங்களாக நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு குறித்த பகுதிக்கு செல்ல முடியாது பாதையை தடுத்ததுடன் அதிகாரிகளுடன் முரண்பட்டனர்.

அத்துடன் சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவன பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் சம்பவ இடத்துக்குச் சென்று இப்பகுதிக்கு அதிகாரிகள் வந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்போது பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையிடுவதற்கு உட்செல்ல முயன்ற நிலையில் மக்கள் திரண்டு இதற்கு எதிர்ப்பு  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles