NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம்,கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு தபாலட்டை அனுப்பி வைப்பு..!

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன்பிகிராடோ தலைமையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த தபாலட்டை அனுப்பும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள்,மத தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தபாலட்டை களை அனுப்பி வைத்தனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வந்தனர்.

மன்னார் தீவில் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட வர்களிடமும் கோரிக்கைகளை முன் வைத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு குறித்த திட்டத்தின் பாதகத்தையும்,இத்திட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை வலியுறுத்தும் வகையிலும் கொழும்பில் உள்ள அலுவலகங்களுக்கு மக்களின் கோரிக்கை அடங்கிய தபால் அட்டைகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது.

புதிய ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது மன்னார் தீவில்  அமைக்கப்படும் காற்றாலை மின்சார திட்டத்தை தான்  ஜனாதிபதியாக வந்தால்  குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதனை வலியுறுத்தும் வகையிலும் குறித்த தபாலட்டை அனுப்பி வைக்கப்படுகிறது.மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை அடங்கிய தபாலட்டைகள் மன்னார் தபாலகம் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles