மாவீரர் நாளுக்கு தடை கோரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து பொது சுகாதாரத்திற்கும், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பங்கமில்லாமல் மாவீரர் நினைவேந்தலை நடத்தலாமென வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் பொலிசாரால் நகர்தல் பத்திரம் இன்று (27.11) தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவு கூருவதற்கு 3 பேருக்கு வவுனியா நீதிமன்றம் மன்றத்திடம் தடை உத்தரவு கோரியிருந்தனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிக்கைக்கு எதிராக சட்டத்தரணி ஆனந்தராஜ் மற்றும் சட்டத்தரணி திலீப்காந் தலைமையில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் குழுவினரால் இதற்கு எதிராக வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டத்தரணிகளின் வாதத்தையடுத்து பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 3 பேருக்கு எதிரான தடை உத்தரவை நிராகரித்த மன்று, உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எவருக்கும் உரிமையுள்ளது. எனவே அதற்கு தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்திருந்தார். அத்துடன் குறித்த விடயத்தில் கலகம் விளைவிப்பவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறும் பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பொது சுகாதாரத்திற்கும், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பங்கமில்லாமல் மாவீரர் நினைவேந்தலை நடத்தலாமென தீர்ப்பளித்துள்ளது.