NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது குறித்து சம்பூர் நீதிமன்றம் உத்தரவு!


தமிழ் மாவீரர் தினத்தை இலக்காகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் சம்பூர் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், போரில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்றம் இரண்டு வார காலத்திற்கு ஆலோசனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் மக்களின் இரு பிரதிநிதிகள் உட்பட 17 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, மாவீரர் நினைவேந்தலின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என வலியுறுத்தி மூதூர் நீதவான் நீதிமன்றம் நவம்பர் 23ஆம் திகதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (1) விதிகளின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மூதூர் நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஸான் பிறப்பித்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதன்படி சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்பூர் கிழக்கு  ஆலங்குளத்தில் புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருக்கும் மயானத்திலோ அல்லது பொதுமக்கள் சட்டரீதியாக பயன்படுத்தக் கூடிய அல்லது எந்தவொரு மயானத்திலோ விடுதலைப் புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவுகூரும் நோக்கத்திற்காக மகாவீரர் நினைவேந்தல் தொடரில் காவல்துறை அதிகார வரம்பிற்குள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106, பின்வரும் நபர்கள் மற்றும் பிறருக்கு பொது சுகாதாரம் மற்றும் பொது வழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். (1) விதியின் அடிப்படையில் நான் பரிந்துரைக்கிறேன்.”

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 17 பேரின் பெயர்களை உள்ளடக்கி  நவம்பர் 23ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.  தமிழ் மாவீரர் தினம் நவம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய மேற்சொன்ன நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த உத்தரவு செல்லுபடியாகும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles