NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மியான்மரின் சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

மியான்மரிலுள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது

அதன்படி, குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளே இவ்வாறு குறிவைக்கப்படுகின்றதாக தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளம் பெறக்கூடிய வேலைகளை பெற்றுத் தருவதாக கூறி இவ்வாறு மனித கடத்தல்கள் இடம்பெறுவதாக அண்மைய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இலாபகரமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்ற போலிக்காரணத்தின் கீழ் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கடத்தல்காரர்கள் தங்களுடைய வலைக்குள் சிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் டுபாய் போன்ற இடங்களுக்கு நேர்காணலுக்காக அழைத்துச் செல்லப்படுவதுடன், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அவர்கள் மியான்மரில் சைபர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றதாகவும் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சைபர் குற்றவியல் முகாம்கள் மீதான விசாரணைகள் கடுமையான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், அங்கு பணியாளர்கள் கொடூரமான உடல் சித்திரவதைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், சுற்றுலா விசாக்களில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்குமாறும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை மீறுவது சட்டவிரோத ஆட்கடத்தலுக்கான பாதிப்பை அதிகரிக்கலாம் என்பதுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் 0112102570 மற்றும் 0768447700 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் யொவவகளசடையமெய;பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் கடுமையான ரகசியத்தன்மையுடன் கையாளப்படும் எனவும் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles