கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான யோசனைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், ஒக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்காக எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை முன்னெடுப்பதற்கான பல உதவிகளை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால், வெளிநாடுகள் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை, உரத் தட்டுப்பாடு, என்பன உருவாகும்.
அரச நிதி நிர்வாகம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும்.
பாராளுமன்றத்தின் பொறுப்புக்களை பாராளுமன்றமே நிறைவேற்றும்.
ஏனைய செயற்பாடுகளை நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.
இதன்படி நிதிசார் செயற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்றத்திலேயே முன்னெடுக்கப்படும்.
இதன் காரணமாக பாராளுமன்றத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமையவே அரசாங்கம் செயற்படும்.
இதேவேளை, அரசியல் முறைமை ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்த இலங்கையை உருவாக்குவதாக ஏற்றுக்கொண்ட சவாலை அவ்வாறே நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதேபோன்று பல்வேறு தரப்புக்களிடத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் அந்த யோசனைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு எதிர்கட்சியும் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்த்திருந்தோம்.
இருப்பினும், எதிர்கட்சிக்குள் காணப்பட்ட உள்ளக பிரச்சினைகளின் விளைவாக அதற்கான ஆதரவு கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.