பின்னடைவைச் சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படும்.
இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழிலை, நிலைபேறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும், தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் பின்னடைவைச் சந்தித்து வரும் கடல் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.