NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முட்டை விலை குறைந்துள்ளபோதும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது – என்.கே. ஜயவர்த்தன..!

சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளபோதும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு செய்யாமல் இருப்பது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் முட்டை விலை காலநிலை போன்றது எனவும், இன்றுள்ள விலை நாளை இல்லை எனவும் நாளுக்கு நாள் முட்டை விலை மாற்றமடைவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, 15, 20 ரூபாவுக்கு இருந்த முட்டை 60, 70 ரூபாவரை விலை அதிகரித்ததாகவும், தற்போது மீண்டும் 25,30 ரூபாவரை விலை குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்பை அடிப்படையாகக்கொண்டு பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு மேற்கொள்வதற்கு நிச்சயமாக கோதுமை மா மற்றும் மாஜரின் விலை குறைவடைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கோதுமை மா விலை குறைப்பு தெரிந்தளவில் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலமாக இடம்பெறவில்லை எனவும் டொலரின் பெறுமதி 300, 400 ரூபாவாக இருக்கும்போது இருந்த விலையே தற்போதும் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் கோதுமை மா மற்றும் மாஜரின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தற்போது கடைகளில் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கேக், 700 ரூபாவரை குறைத்து விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லாமல் முட்டை விலை குறைவடைந்தவுடன் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம் செய்ய எந்தவகையிலும் முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles