முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மாவீரர் நிகழ்வுகளுக்கு தடைகளை விதிப்பதற்கு எதிராக கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இன்று (27) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றையதினம் (27) முல்லைத்தீவு நீதவானால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக (24) அன்று வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த கட்டைளையை ஒவ்வொரு நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், ஒவ்வொரு விதமாக கூறி பொதுமக்களின் மாவீரர் நிகழ்வு செயற்பாட்டுகளுக்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.
மாவீரர் நிகழ்வு செயற்பாடுகளுக்கு பொலிஸார் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்தோம்.
இதனை ஏற்ற மன்று, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் இறந்த ஆன்மாக்களை நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என தெளிவான கட்டளை ஒன்றை வழங்கியிருக்கின்றது.
மேலும், எம்மால் கூறப்பட்டவாறு கார்த்திகை பூவினை இறந்தவர்களின் நினைவிடத்தில் பாவிப்பதற்கும், சிவப்பு மஞ்சள் கொடிகளை பாவிப்பதற்கும், சோக இசைகளுக்காக ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் மற்றும் மாவீரர் எனும் வசனம் பாவிக்காது துயிலும் இல்லம் எனும் பதாதையை வைக்கவும் மன்று அனுமதி வழங்கியிருக்கின்றது.
இது உண்மையில் இறந்தவர்களின் உறவுகளுக்கு நல்ல செய்தி என்பதுடன் அவர்கள் தங்களுடைய உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளையாகும்.
இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பலர் என்னுடன் இணைந்து வழக்கில் முன்னிலையாகி இருந்தார்கள்.
இந்த வழக்கில் யாருக்கு எதிராக கட்டளை வழங்கப்பட்டதோ அவர்கள் இங்கே முன்னிலையாகி இந்த வழக்கிற்கான தீர்ப்பினை பெற்றுக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.