முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் நெறிமுறைக்கு மாறாக இடம்பெறும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளர் பாலநாதன் சதீசனால் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (09.11.2024) பிற்பகல் இடம்பெற்ற எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த கூட்டத்திலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச கட்டடங்கள் மற்றும் பாலங்கள், வீதிகள், மின்கம்பங்கள் போன்றவற்றில் தேர்தல்கள் சட்டத்திற்கு முரணான வகையில் வேட்பாளர்களது சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை, கட்சிகளது சின்னங்கள், வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் வரையப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களிற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர்களது சுவரொட்டிகள் வாக்களிப்பு தினத்திலும் அகற்றப்படாமல் இருந்தமை தொடர்பிலும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படாமல் இருக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.
இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பி.ரகுநாதன் தெரிவித்தார்.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் தேர்தல்கள் கண்காணிப்பு நிறுவனமான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கண்காணிப்பாளர்களான விஜயரத்தினம் சரவணன், இராசையா உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், மேலதிக மாவட்ட செயலாளர் குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
