இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்றாவது இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் சகலதுறை வீரரும் பி லவ் கண்டி அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்க தெரிவித்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் (LPL) கொழும்பில் நடைபெற்ற ஆரம்ப போட்டிகளில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான பி லவ் கண்டி அணி தோல்வியை தழுவியிருந்த போதும், பல்லேகலையில் நடைபெற்று முடிந்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பல்லேகலையில் நடைபெற்ற போட்டிகளை பொருத்தவரை பி லவ் கண்டி அணியானது பக்ஹர் சமான், மொஹமட் ஹரிஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரின் வருகைகளின் உதவியுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
குறித்த இந்தப் போட்டிகளை பொருத்தவரை வனிந்து ஹஸரங்க தன்னுடைய துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்களை செய்திருந்தார். இதில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது இடத்திலும், கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5வது இடத்திலும் களமிறங்கியிருந்தார்.
துடுப்பெடுத்தாட களமிறங்கியது மாத்திரமின்றி ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்ததுடன், கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஹஸரங்கவின் துடுப்பாட்டம் கேள்விக்குறியாக மாறியிருந்த போதும், துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்களை ஏற்படுத்தி பிரகாசித்திருந்தார். எனவே தேசிய அணியில் மூன்றாவது இலக்கத்தில் களமிறங்கி பிரகாசிக்க முடியுமா? என கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில் ஹஸரங்க அதற்கு பதிலளித்திருந்தார்.
இதுதொடர்பில் ஹஸரங்க குறிப்பிடுகையில், “நான் அணியின் தீர்மானத்தின் காரணமாக மூன்றாவது இலக்கத்தில் களமிறங்கி துடுப்பெடுத்தாடினேன். எங்களுடைய திட்டத்துக்கு இது முக்கியமான ஒன்றாக இருந்தது.
நான் ஆரம்பத்தில் களமிறங்கி துடுப்பெடுத்தாடும் போது, எம்முடைய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்து களமிறங்கி துடுப்பெடுத்தாடுவதற்கு வாய்ப்புகள் இருந்தன. அதனால்தான் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் துடுப்பெடுத்தாடினேன்.
தேசிய அணியை பொருத்தவரை நான் ஐந்தாவது இலக்கத்தில் களமிறங்கி துடுப்பெடுத்தாடியுள்ளேன். ஓட்டங்களையும் பெற்றுள்ளேன். எனவே வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவதற்கு தயாராக உள்ளேன்” என்றார்.
லங்கா பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், பி லவ் கண்டி அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.