NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோசமான காலநிலையால் இது வரையில் 98பேர் பாதிப்பு!

காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததாலும், பலத்த காற்று காரணமாகவும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில்,காலியில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும், களுத்துறையில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான காலநிலையால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, களுத்துறை – பண்டாரகம பகுதியில் கடும் காற்றினால் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

Share:

Related Articles