NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் 65 லட்சம் ரூபா கையாடல் – பெண் உள்ளிட்ட இருவர் கைது!

வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலோசனைக் கட்டணங்கள் தவிர வேறு எந்தக் கட்டணமும் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிட்டுக் காட்டவேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் பேசியவர்களின் கதையை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதிகள், அடையாள அட்டைப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களை குறிப்பிடப்பட்ட கொழும்பு விலாசம் ஒன்றுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்குமீதியை ஸ்கீரின் சொட் எடுத்தும் அனுப்பியுள்ளார். இந்தநிலையில் கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது.

சிலநாள்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபாவும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேகநபர்களால் பெறப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மைப் பெற்றுள்ளார். அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

தாம் சேகரித்த ஆவணவங்கள் தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேநபர்கள், தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக் கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என்று கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles