யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர்.
4 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விதிகளுக்குப் புறம்பாக மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், அவ்வாறான விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் போராடுதல், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் தொடர்பிலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதிலளித்த போது, மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள பல்கலைக்கழக பேரவை கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எட்டப்படும் எனக் குறிப்பிட்டார்.