யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதனால் யாழ். மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பொருத்தமான பொறிமுறையூடாக நுளம்பு பெருகாது தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறிப்பாக காணிகளில் காணப்படும் வெற்றுக்கலன்களைச் சேகரித்து உரிய வகையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சகல பிரதேச செயலாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.