NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு வெளிப்படுத்திய விடயம்!

ரமழான் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மத வழிபாடுகள் நடைபெறும் பள்ளிவாசல்களை அடையாளம் கண்டு சிறப்பு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இதனிடையே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கிடைத்த தகவல் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ரமழான் காலத்தில் அடையாளம் காணப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, நடமாடும் ரோந்து பணிகள் மற்றும் இரவுநேர ரோந்து பணிகளில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குற்றவாளிகள் இருந்தால், அவர்களை அடையாளம் காண, வீதி தடுப்புகளை பயன்படுத்தவும், சோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேச பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் பொய்யான பிரசாரமாகும். ஆனால் அக்குறணை சம்பவத்தை எடுத்துக் கொண்டால், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்திருந்தது. அக்குறணையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தகவல் போலியானதா? இது உண்மையா? அதை உறுதி செய்யும் வரை அந்த இடத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்படி, அந்தப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளிவாசல்களின் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். ஆனால், அந்தத் தகவல்கள் போலியான தகவல் என்பதை இப்போது புரிந்துகொண்டோம். இது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தவறான தகவல் கொடுத்த நபரை கண்டுபிடிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Share:

Related Articles