பிரதமர் மோடி ரஷ்யாவின் சிறந்த நண்பர் என அந்த நாட்டு ஜனாதிபதி புட்டின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மாஸ்கோவில் ரஷ்ய அரசாங்க அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வு மன்றத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உரை நிகழ்த்தினார்.
அப்போது பிரதமர் மோடியையும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்தியாவில் உள்ள நமது நண்பர்களும், நமது மிகச்சிறந்த நண்பரான பிரதமர் நரேந்திர மோடியும் சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த திட்டமானது இந்திய பொருளாதாரத்தில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை உருவாக்கியவர்கள் நாம் அல்லாமல் நம் நண்பர்களாக இருந்தாலும், நன்றாக செயல்படுவதை பின்பற்றுவது எந்த தீங்கும் செய்யாது’ என்று புட்டின் கூறினார்.
மேலும் உள்ளூர் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்கும் பயனுள்ள மாதிரியை உருவாக்கியதற்காக இந்தியாவை அவர் பாராட்டினார்.
உள்நாட்டிலேயே தயாரிப்புகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், அதற்கான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காகவும், இதற்காக அர்ப்பணிப்பு முதலீடுகளை பெறும் நோக்கத்துடனும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.