நேற்றைய தினம் வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும் என வானிலை விற்பன்னரும், யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை நாளைய தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, நாளை மறுதினம்;றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் என்றும், எதிர்வரும் 26ஆம் திகதி புயலாக மாற்றமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, கரையைக் கடக்கும் என்பதுடன், தற்போதைய நிலையின் படி இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுச்சேரி – கடலூருக்கு அண்மித்ததாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் நாளை இரவு அல்லது நாளை மறுதினம் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியை அண்மித்து பின்னர் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இது மிதமான வலுவுள்ள புயலாக கருதப்பட்டாலும் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாளை மறுதினம் முதல் 28ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை விற்பன்னர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.