வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 302 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 37 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 44 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 80 பேரும், வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 63 பேரும் மதிப்பளிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நாம் எவ்வாறான தயார்படுத்தல்களுடன் இருந்தாலும் இடர்கள் வரும்போது சில வேளைகளில் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும். 4 நாள்களில் சுமார் 500 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றது. சகல இடங்களும் வெள்ளக்காடாகியது. ஆனாலும், சில நாட்களிலேயே வழமைக்கு திரும்பும் வகையில் நீங்கள் அனைவரும் பணியாற்றியிருக்கின்றீர்கள்.
உங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்க்கியிருந்தாலும் நீங்கள் நித்திரை முழித்து இரவிரவாக மக்களைப் பாதுகாக்க களத்தில் நின்றிருக்கின்றீர்கள். அப்படிச் செயற்பட்ட உங்களை பாராட்டி மதிப்பளிப்பது எமது கடமை. இது உங்களுக்கு உற்சாகமளிக்கும்.
சவால்களை நாம் சந்திக்கும்போதுதான் எமது சேவைகள் இன்னமும் மேம்படும். இந்த இடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். நாம் அவற்றை மீளாய்வு செய்யவேண்டும்.
சரியான தீர்மானங்களை விரைந்து எடுக்கவேண்டும். தலைமைத்துவத்துக்கு அதுதான் அழகு. விரைந்து தீர்மானங்களை எடுக்கத்தவறினால் பிரச்சினைகளுக்குத்தான் முகம்கொடுக்கவேண்டியிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழைக்கு முன்னதாக வெள்ளவாய்க்கால்களை துப்புரவு செய்வதை எமது வருடாந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்குவதன் ஊடாக முன்னாயத்த நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கலாம்.
இதேவேளை மத்தி, மாகாணம் என்று பாராது இவர்கள் எமது மக்கள் என்ற அடிப்படையில் இந்த இடர் நடவடிக்கையின்போது சகல திணைக்களங்களும் செயற்பட்டன. அது வரவேற்கப்படவேண்டியதுடன் தொடரவேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.