NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடக்கில் விவசாய நிலத்தை மயானமாக மாற்றும் நெருக்கடி – நீதிமன்றம் செல்ல ஆலோசனை!

தமிழ், சிங்கள மக்களால் உரிமைக் கோரப்படும் வன்னியிலுள்ள காணி ஒன்றின் உரிமையை தீர்மானிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு பிராந்திய காணி அதிகாரிகள் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருபனிச்சாங்குளம் கிராமத்தில் மயானம் அமைப்பதற்கு காணியை அளவீடு செய்து தருமாறு, கொக்குவெளி கிராமத்தை சேர்ந்த சிங்கள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வார ஆரம்பத்தில் நில அளவையாளர்கள் வருகைத்தந்துள்ளனர்.  நில அளவீட்டுக்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் காலி முகத்திடல் செயற்பாட்டாளரான பலாங்கொட காஷ்யப்ப தேரர் மற்றும் மற்றுமொரு பௌத்த பிக்கு ஆகியோருடன் வருகைத்தந்தனர்.

கொக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள் மயானத்திற்கென கோரிய காணி, பரம்பரையாக  தாம் விவசாயத்தில் ஈடுபடும் காணியென கருபனிச்சாங்குளம் கிராமத்தில் வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்த காலத்தில் தமது கிராமத்தை விட்டு வெளியேறியதால், குறித்த காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், எனினும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் மீள்குடியேறிய தாம் அந்த காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கருப்பனிச்சாங்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருபனிச்சாங்குளம் கிராமத்தின் குறித்த நிலப்பகுதி, 1967ஆம் ஆண்டு காலப்பகுதியில் மயானமாக பயன்படுத்தப்பட்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் பிரதேச செயலகத்திடம் உள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் என். கமலதாஸ்  கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இந்த காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடுமாறு கருபனிச்சாங்குளம், கொக்குவெளி கிராமவாசிகளை வலியுறுத்திய வவுனியா பிரதேச செயலாளர் என். கமலதாஸ், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில், கிராமத்திற்கு அருகில் உள்ள மற்றொரு மயானத்தை பயன்படுத்துமாறு கொக்குவெளி கிராம மக்களைக் கேட்டுக் கொண்டார்.

வவுனியா மாவட்ட செயலகத்தினால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில், குறித்த காணி வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளதாக கருபனிச்சாங்குளம் கிராமத்தில் வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிப்பது தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது, 1985ஆம் ஆண்டு வரைபடத்திற்கு அமைய, வனவளத் திணைக்களம் செயற்பட வேண்டுமென  ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். 

Share:

Related Articles