(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வடக்கின் 07 தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் இம்மாதம் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலை நடத்த தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணம் – செல்வா மண்டபத்தில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் சரவணராஸா பதவி விலகல் உட்பட வடக்கு கிழக்கு மாகாண மக்களைப் பாதிக்கும் 07 பிரதான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் மூட வேண்டும், பயண நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த பூரண ஹர்த்தாலுக்கு அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இந்த விவாதத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 13ஆம் திகதி இந்த ஹர்த்தாலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போது, முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு பல தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, ஹர்த்தாலின் திகதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – செல்வா மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர.;எல.;எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், டெலோ அமைப்பின் தவிசாளர் நிரோஷ் உட்பட பல மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.