கடந்த நூற்றாண்டில் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் அனைவரும் இப்போது ஒன்றாக போராட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
77ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுவதுடன், இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்களின் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்துவதுடன், சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் என்ற வகையில், கடந்த 4 மாதங்களில் இனவாதம், மதவாதம் இன்றி மற்றவர்களை சமத்துவம், கௌரவம், கரிசனையுடன் பார்ப்பது, நடத்துவது மற்றும் சட்டத்தை அமுல்படுத்துவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் ஒன்றுகூடுமாறும் அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.