NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன இறக்குமதிக்கான விளம்பரங்கள் தொடர்பில் வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை..!

வாகன இறக்குமதிக்கான காலக்கெடு தொடர்பில் சில நிறுவனங்களின் விளம்பரங்களின் நம்பகத்தன்மை குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற அறிக்கைகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

சரியான சரிபார்ப்பு இல்லாமல் இதுபோன்ற கூற்றுக்கள் கூறுவது நியாயமற்றது என்றும், எனவே இதுபோன்ற தகவல்களை பரப்புவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன விலைகளை விளம்பரப்படுத்துவதையும், முன்கூட்டிய கொள்வனவு கட்டளைகளை செய்யுமாறு நுகர்வோரை வற்புறுத்துவதையும் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாகவும் இது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகவே தாம் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விடயங்கள், தற்போது வானங்களை வைத்திருப்போர், தேவையற்ற அச்சத்தில் குறைந்த விலையில் தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் எனவும், அவசர முடிவுகளை எடுக்க உந்துதலை அளிக்கும் எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம்மை பொறுத்தவரையில், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகவே தளர்த்தப்படுவதோடு, அதன்படி முதலில் பஸ்கள் மற்றும் பாரவூர்திகளும், அதைத் தொடர்ந்து வான்கள் மற்றும் ஏனைய வணிக வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு பொறுப்பான அதிகாரிகளோ இன்றுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles