கஹதுடுவ வெத்தர வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியதில் வீதியில் பயணித்த மாணவன் படுகாயமடைந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெத்தர மகா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பண்டாரகம வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவனே விபத்தில் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வெத்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் தாயார் வெத்தர வைத்தியசாலையில் ஊழியராக பணிபுரிவதாகவும், குறித்த மாணவன் மதியம் உணவினை எடுத்துச்செல்வதற்காக வீதிக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்கூட்டருடன் கார் மோதி சிறிது தூரம் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
பிலியந்தலையிலிருந்து கஹத்துடுவ நோக்கிச்சென்ற காரின் வலதுபக்கப் பின்பக்க டயரில் காற்று இறங்கியதால் சாரதிக்கு காரைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் 29 வயதான காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.