NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய அபாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டின் பல பகுதிகளில் போதிய தென்மேற்கு பருவமழை பெய்யாதமையால் பல ஏரிகள் வறண்டுள்ள நிலையில், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்மட்டம் 45 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

வறட்சியான காலநிலை நீடித்தால், அடுத்த பருவத்திற்கான நீர் வழங்கல் நடவடிக்கைகள் பாரிய நெருக்கடியாக மாறும் என நீர்ப்பாசன அதிகாரிகள் எச்சரிககை விடுத்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் நீர் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 25 வீதமாக குறைந்துள்ளதுடன், இதன் காரணமாக சமனல குளத்திலிருந்து நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்குவது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சமனல நீர்த்தேக்கத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அந்த நீர்த்தேக்கத்திலிருந்து உடவளை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்குவது நெருக்கடியான சூழ்நிலையாக மாறியுள்ளது.

குளங்களில் இருந்து நீர் விநியோகம் செய்ய முடிந்தாலும், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் போதிய மழை பெய்யாவிட்டால், பாரிய சிக்கல் நிலை ஏற்படும் என நீர்பாசன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதான ஏரிகளான அநுராதபுரம் திசா ஏரி மற்றும் நுவரெட்டி ஏரிகளின் மொத்த நீர் மட்டம் 20 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், கலா ஏரி மற்றும் இராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறிப்பிட்ட மட்டத்தில் இருப்பதாகவும் நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பல ஏரிகளின் மொத்த நீர்மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. 89 பெரிய குளங்களும், 300 நடுத்தர குளங்களும், 12,000 சிறிய குளங்களும் இவ்வாறான அபாய நிலையில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles