தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நிறைவில் இலங்கை இளையோர் அணி வெற்றியை நெருங்கியுள்ளது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய தீவுகள் அணி 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்ததுடன்இ இலங்கை இளையோர் அணி 326 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணிக்காக முதல் நாள் ஆட்டத்தில் ருசாந்த கமகே 58 ஓட்டங்களை குவித்து சிறந்த ஆரம்பத்தை கொடுத்திருந்ததுடன், இன்றைய தினம் மல்ஷ தருபதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த சாருஜன் சண்முகநாதன் 36 ஓட்டங்களையும், தினுர கலுபான 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களின் இணைப்பாட்டத்தின் பின்னர் தனியாளாக மல்ஷ தருபதி 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் பிரகாசித்திருந்த விஹாஷ் தெவ்மிக 31 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நேதன் சேலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை தொடர்ந்ததுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறிய ஆரம்பங்களை பெற்றுக்கொடுத்தனர். இதில் ஸ்டீபன் வெதர்பேர்ன் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஸ்டீபன் பஸ்கல் 25 ஓட்டங்களை பெற்றார்.
இவர்களின் விக்கெட்டிழப்புகளை தொடர்ந்து இந்த தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தால் பிரகாசிப்பை வெளிப்படுத்திவரும் ஜோர்டன் ஜோன்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், தனியாளாக ஓட்டங்களை குவித்தார். இவர் மிச்சிறப்பாக ஆடி 133 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்த நிலையில், இன்றைய ஆட்டநேர நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள மே.தீவுகள் அணி 251 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் விஹாஷ் தெவ்மிக 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியதுடன், கவீஷ பியூமால் மற்றும் மல்ஷ தருபதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேநேரம் இலங்கை அணியைவிட மே.தீவுகள் இளையோர் அணி 52 ஓட்டங்களை மாத்திரமே அதிகமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.