புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தாங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13 ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன் தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால் நான்கு பிள்ளைகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு கணவன் தனது மனைவியிடம் கேட்டுக்கொண்டேன்.தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடும் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர்களின் உதவியை நாடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.எனினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் நேற்று (17) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தெரிவித்தார்.மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.