(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மாருக்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் நேரம் ஒரு மணித்தியாலத்தில் இருந்து இரண்டு மணித்தியாலம் வரை பால் கொடுக்க உரிமை உண்டு என தொழிலாளர் திணைக்களம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவின் தொழில் ஆணையாளர் என்.வை.துஷாரி தெரிவித்துள்ளார்.
‘தாய்ப்பால் உழைக்கும் பெற்றோருக்கு ஆறுதலான மாற்றம்’ என்ற தொனிப்பொருளில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு நேற்று ஜ19ஸ குடும்ப சுகாதார பணியகம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் இணைந்து சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தாய்ப்பால் இரண்டு மணி நேரம் என்பது பலருக்குத் தெரியாமல் உள்ளது. 2018ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின் விளைவாக தாய்ப்பால் வழங்கும் நேரம் 2 மணித்தியாலங்களாக திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி, சம்பந்தப்பட்ட தாயின் பணிக் காலத்தில் குழந்தைக்கு ஏதேனும் இரண்டு மணிநேரம் தாய்ப்பால் கொடுப்பதற்கான நேரத்தை வழங்க, நிறுவனத்தின் முதலாளி கடமைப்பட்டிருக்கிறார்.
இந்த இரண்டு மணி நேரத்தை, காலை அலுவலக வேலை தொடங்கப்பட்டதில் இருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகும், கடமை முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பெற்றுக்கொள்ளலாம்.
இல்லையெனில், சம்பந்தப்பட்ட தாய் விரும்பியபடி குழந்தைக்கு இரண்டு முறை பால் கொடுக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட தாய் வேலை செய்யும் இடத்தில் குழந்தை இருந்தால், வேலை செய்யும் காலத்தில் எந்த நேரத்திலும் குழந்தைக்கு அரை மணி நேரத்திற்கு இரண்டு முறை உரிமை உண்டு எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.