ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறைவீரரும், அதன் தலைவருமான ஹீத் ஸ்ட்ரேக் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத் ஸ்ட்ரேக் புற்று நோய்க்கு எதிராக போராடி வந்த நிலையில், புற்று நோய்க்காக பெற்ற சிகிச்சைகள் பலனின்றி தன்னுடைய 49ஆவது அகவையில் இவ்வுலகினை விட்டுப் நீங்கியிருக்கின்றார். ஹீத் ஸ்ட்ரேக் இன் மரணச் செய்தி அவரின் மனைவி மூலம் உறுதிப்படுத்தப்ட்டிருக்கின்றது .
ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி உலகிற்கு தந்த மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும், சிறந்த சகலதுறைவீரர்களில் ஒருவராகவும் கருதப்படும் ஹீத் ஸ்ட்ரேக் 2000-2004 வரையிலான காலப்பகுதியில் ஸிம்பாப்வே அணியினை தலைவராக வழிநடாத்தியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
1993ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் பெற்ற ஹீத் ஸ்ட்ரேக் மாத்திரமே இன்று வரை ஸிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஸிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஹீத் ஸ்ட்ரேக் அணிக்காக இதுவரை 455 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு 5000 ஓட்டங்கள் வரையில் குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் செயற்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரேக் ஸிம்பாப்வே, ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ், குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை பயிற்றுவித்த அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.