இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர், சுமார் ஓராண்டாக காயம் காரணமாக எந்தவொரு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவில்லை.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத ஸ்டீவன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீவன் பின் கூறுகையில்,
‘அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுகிறேன். கடந்த 12 மாதங்களாக காயத்தில் இருந்து மீள்வதற்காக எனது உடலோடு போராடினேன். இறுதியில் தோல்வியே மிஞ்சியது. சில வியப்புக்குரிய நினைவுகளோடு கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட் உட்பட ஒட்டுமொத்தத்தில் 125 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளேன்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது தான் கனவாக இருந்தது. இவ்வளவு போட்டிகளில் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த 12 மாதங்களாக எனக்கு பக்கபலமாக இருக்கும் சஸ்செக்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி. கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வகையில் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருப்பேன் என்று நம்புகிறேன்‘ எனத் தெரிவித்துள்ளார்.