சர்வதேச கிரிக்கட் பேரவையினால் விதிக்கப்பட்டள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.
எனவே, இதனை தேசிய பிரச்சினையாக கருதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.
இருப்பினும், இது அரசியல் தலையீடு அல்ல என அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே சர்வதேச கிரிக்கட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு தடை விதித்ததாக கிரிக்இன்போ இணையத்தளம் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இலங்கை மக்களின் பொதுச் சொத்தானதே தவிர ஷம்மி சில்வாவின் தனிப்பட்ட சொத்து அல்ல. அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தால் அது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.
எனவே, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் நிறைந்த நிர்வாகக் குழுவின் கொடுங்கோன்மைக்கு எதிராக அனைத்து கிரிக்கட் பிரியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர்.
எனவே, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல கிரிக்கட்டை பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.