ஹஜ் யாத்திரையின் போது 550 இஸ்லாமிய யாத்ரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரையின் போது கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
உயிரிழந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கடுமையான நீரிழப்புக்கு ஆளானதாகவும் சவூதி அரசு தெரிவித்துள்ளது.
வெப்பமான காலநிலையில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்ரீகர்கள் பலர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதனிடையே, இந்த வாரம் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று சவுதி தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அய்மன் குலாம் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அதிக நேரம் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு சவூதி அரேபிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் பயணத்தின் போது நெரிசல்கள், கூடாரங்களில் தீ மற்றும் பிற விபத்துக்கள் காரணமாக நூற்றுக்கணக்கான இறப்புகளை ஏற்படுட்டுள்ளன.
இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது 35 துனிசிய குடிமக்கள் இறந்ததாக துனிசிய செய்தி நிறுவனம் Tunis Afrique Presse செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
புனித யாத்திரையின் போது பதினொரு ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று செனகல் குடிமக்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித யாத்திரையின் போது நூற்று நாற்பத்து நான்கு இந்தோனேசிய குடிமக்கள் இறந்ததாக இந்தோனேசிய சுகாதார அமைச்சின் தரவு செவ்வாயன்று காட்டியுள்ளது.
ஹஜ் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இறைத் தூதரான முகமது நபி தனது சீடர்களுக்குக் கற்பித்தபடி மதச் சடங்குகளைச் செய்வதற்காக மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மக்காவிற்குச் செல்லும் வருடாந்திர யாத்திரையாகும்.
இதன்படி, கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் குறைந்தது 240 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.