உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ளு.ஜெய்சங்கர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை;கு வந்திருந்த அவர், ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருடனான சந்திப்பை நிறைவு செய்து மாலை இந்தியா திரும்பியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜத ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளார். அதேநேரம் எதிர்வரும் நாட்களில் இந்தியப் பிரதமரை இலங்கை விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துதல் என்பன நல்லிணக்க நோக்கங்களை எளிதாக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர் தொடர்பான கவலையையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் அவர்களுக்கான அபராதத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.