NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

’13ஆவது திருத்தத்தைப் புறந்தள்ள முடியாது’ – ஜனாதிபதி

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நாங்கள் பார்க்க வேண்டும். ஏனைய நாடுகளின் அதிகாரப் பகிர்வை நாங்கள் ஆராய வேண்டும்.

பாராளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை முன்னோக்கிகொண்டு செல்வதானால் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் அவசியம்.

வருடாந்தம் மாகாண சபைகளுக்கு 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. அதனால் நன்மைகள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஆனாலும் 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் புறந்தள்ள முடியாது.

எனவே அது தொடர்பான எனது யோசனைகளை நான் முன்வைத்துள்ளேன். நாடாளுமன்றம் அதனை ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.

மாகாண சபைகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். எனவே அரசமைப்பதைத் திருத்தம் செய்து மக்களுக்கு ஏற்ற வகையில் தீர்மானமொன்றை எடுத்தல் அவசியம்.

மாகாண சபை முறைமையை அரசமைப்பிலிருந்து நீக்கிவிடக் கூடாதென்பது ஏகமானதான கருத்தாக இருக்கின்றது.

இது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பொதுவானது. மக்களுக்குத் தேவைப்படும் வகையில் இதனை மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கின்றது. மாகாண சபை சட்டத்திலும் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை இதன் பின்னர் நடத்த வேண்டும். இதர அதிகாரங்கள் குறித்து முதலில் பேசி பின்னர் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பேசுவோம். இலகுவான விடயங்களை முதலில் ஆராய்ந்து பின்னர் கடினமான விடயங்களை ஆராய்வோம்.

அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

முடிவெடுப்பதில் எதிர்க்கட்சிகளைக் கருத்தில் கொண்டு, சமத்துவமானதும், ஒத்துழைப்புடனான அரசியல் சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பகத்தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் புதிய பயணத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களின் தனிப்பட்ட வாத, விவாதங்களை தவிர்த்து நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் நீண்ட கால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவுகளை கூட்டாக எடுக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேர்மையான ஒற்றுமை தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles