NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

13 ஆவது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே தனது நோக்கம் என்கிறார் ஜனாதிபதி…!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்து இதனைச் செய்ய முடியாது என்றும் இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 9 மாகாண சபைகளில் 7 மாகாணசபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்தால், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles