13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசியல் தரப்பில் பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அது குறித்து ஆதங்கமடைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் காரசாரமான வாதத்தை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கருத்து தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெற்றது.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட அவர்,
மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றி பேசுகிறார்.
நீங்கள் 13 மைனசும் கொடுக்க கூடாது என்று சொல்கிறீர்கள், இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீங்கள் தரும் செய்தி என்ன? நீங்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள், அது ஒருபோதும் நடக்காது எனக் கூறினார்.
அதைவிட 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்த சட்டமூலத்தை உங்கள் கட்சி, பாராரளுமன்றத்தில் கொண்டு வரட்டும்.
அதைப் பாராளுமன்றம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை உலகம் அறியட்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலகம் சொல்வதை கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, கதவுகளை மூடி வைத்து இந்த நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது.
அதனால்தான் இன்று இந்த நாடு வீழ்ச்சியடைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.