(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் இரண்டு மாதங்களில் 130 வகையான மருந்துகளை அவசரகால கொள்வனவுகளின் கீழ் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த மருந்துகளை கொள்முதல் செய்ய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் மருந்துகளை வழங்குவதாக உறுதியளித்த திகதி மேலும் தாமதமானதால் அவசரகால கொள்முதல் கீழ் இந்த மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
மேலும், இலங்கைக்கே உரிய வகையில் இந்த மருந்துகளின் பாதுகாப்பு முத்திரைகள் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமும் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சரத் லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த வகை மருந்துகளை வழங்க ஒப்பந்தத்தில் இணைந்த விநியோகஸ்தர்கள் உரிய நேரத்தில் மருந்துகளை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவசரகால கொள்வனவுகளின் போது தரமற்ற மருந்துகளைப் பெறுவதை நிறுத்த முடியாது என சுகாதார நிபுணர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தர பரிசோதனை செய்யாமல் தற்காலிக உரிமம் வழங்கியதே இதற்கு காரணம் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலப்பகுதியில் இவ்வாறான 765 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.
அப்போது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அத்தகைய உரிமம் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தது.