நாடளாவிய ரீதியில் 14,000 கிராம சேவையாளர் பிரிவுகளில் சமூக பொலிஸ் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம்“ஒவ்வொரு கிராமத்திலும் வசிப்பவர்கள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குவதன் மூலமும், வெளி மூலங்களிலிருந்து குறிப்பிட்ட கிராமங்களுக்குள் நுழையும் நபர்களை கண்காணிப்பதன் மூலமும் தேசிய பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதில் இந்த குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன,” என அமைச்சர் குறிப்பிட்டார்.
வரலாற்றில் முதல் தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கமரா அமைப்பு பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையானது நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் தேடப்படும் குற்றவாளிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்தோடு, நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 நபர்களை பொலிஸார் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சுமார் 135 பேர் சிறையில் இருந்தபோதும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் இந்த தகவல் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்களின் பட்டியலைத் தொகுத்துள்ளனர். இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவர்கள் நியமிக்கப்பட்ட பகுதிகளில் கைது செய்யும் பணியில் OIC கள் இப்போது பணிபுரிகின்றனர்,
இந்த முயற்சிகளின் மூலம் கைது செய்யப்பட்ட ஏராளமான சந்தேக நபர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.