NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2023 – ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையில் ?

இந்த ஆண்டுக்கான (2023) ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடங்கள் தொடர்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளாக இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் நடாத்தும் உரிமம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இடம் காணப்பட்டிருந்தது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கு தமது சொந்த நாட்டினை தெரிவு செய்திருந்தது.

எனினும் பாகிஸ்தான் – இந்தியா  இடையில் காணப்படும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்திருந்தது.

இதனால் ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவது சந்தேகமாகியிருந்தது. இதன் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆசியக் கிண்ணத் தொடரினை பாகிஸ்தான் – ஐக்கிய அரபு இராச்சியம் என இரு நாடுகளில் நடாத்த தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

எனினும் இந்த தீர்மானத்திற்கும் தொடரில் பங்கெடுக்கும் ஏனைய நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததனை அடுத்து ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் நாடு தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வந்தது.

இந்த நிலையில் ஆசியக் கிண்ணத் தொடர் நடாத்தும் இடம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆசியக் கிண்ணத் தொடரானது பாகிஸ்தான் – இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் இடம்பெறுகின்றது.

அதன்படி ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், இறுதிப் போட்டி அடங்கலாக எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையிலும் நடாத்தப்படவிருக்கின்றன. இதில் இந்திய அணி பங்கெடுக்கும் அனைத்து போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடங்கள் தொடர்பில் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருப்பதோடு, தொடரின் போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டு குழுக்கள் காணப்படுவதோடு குழு A இல் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் காணப்படுவதோடு குழு B இல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles